Tuesday, March 25, 2008

முஸ்லிம் இளைஞன் மீது காவல்துறை கட்டுமிரான்டி தாக்குதல்

வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட
முஸ்லிம் இளைஞன்.காவல்துறையால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்


நெல்லை மாவட்டம், புளியங்குடியை அடுத்துள்ள ஊர் வாசுதேவநல்லூர். இங்கு சுமார் 2,000 முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். வாசுதேவநல்லூரில் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது 13 வயது மகன் பாதுஷா அவ்வூரைச் சார்ந்த சில இளைஞர்களுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காத அப்துல் காதர் பலமுறை தனது மகனின் நண்பர்களான நிஜாம் சேக் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதியத்திற்கு மேல் பாதுஷா, நிஜாம் சேக் மற்றும் 6 நபர்களுடன் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். தன் பேச்சை தொடர்ந்து மதிக்காமல் நடந்து வரும் தன் மகன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரமுற்று தன் நண்பரான வாசுதேவநல்லூர் உளவுத்துறை தலைமைக் காவலர் கண்ணனிடம் தன் மகனின் நண்பர்களை கண்டிக்குமாறு வாய்மொழியாக புகார் செய்துள்ளார். உடனே கண்ணன் குளக்கரைக்கு வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த நிஜாமை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த கணேசன். பண்டாரம் ஆகிய இரு காவலர்களும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


இம்மூவரும் சேர்ந்து நிஜாமை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இவரிடம் நாளை அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த நிஜாமின் வாயிலிருந்து இரத்தம் வர தொடங்கியுள்ளதோடு, மூச்சு விடவும் அவதிப்பட்டுள்ளார். இவருடைய தந்தையார் ஏற்கனவே விபத்தில் காயமுற்று நடக்க இயலாத நிலையில் உள்ளார். இவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அவர்கள் சிசிக்கை அளிக்க மறுத்துள்ளனர். இவ்விஷயம், புளியங்குடி த.மு.மு.க.நகர நிர்வாகிகளுக்கு தெரிய வர அவர்கள் தலையிட்டு நிஜாமை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது நிஜாம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவம் கேள்விப்பட்ட அவ்வூர் மக்கள் ஞாயிறு இரவு வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில், குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். உடனடியாக அங்கு விரைந்த புளியங்குடி நகர நிர்வாகிகளிடம், புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக 3 காவலர்களும் ஆயுதப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் வாசுதேவநல்லூரில் திங்களன்று கூடிய த.மு.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் செவ்வாயன்று (25.03.2008) கடை அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உட்பட்ட உளவுப் பிரிவினர் தங்களது பணியை மறந்து சட்டம், ஒழுங்கு காவல்துறையினருடன் கை கோர்த்து கொண்டு சில இடங்களில் கட்டப் பஞ்சாயத்து, பணம் வசூல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு உண்மை தகவல்கள் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர். துடிப்புடன் செயல்படுபவர் என்று பெயர் பெற்ற நெல்லை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தினகரன் அவர்கள் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு உளவுத்துறைக்கு தகுதியான நபர்களை பணி அமர்த்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


செய்தி தொகுப்பு : நெல்லை உஸ்மான்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template