Wednesday, March 12, 2008

அன்புள்ள அன்னையர்க்கு...

அன்புள்ள அன்னையர்க்கு


அம்மா.. .. ..!! அஸ்ஸலாமு அலைக்கும்!!! வ அலைக்கும் ஸலாம்!! யா! அப்துல்லா!!

அங்கே மக்கத்துல் முகர்ரமாவின் மதில்கள் மீதும், அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வீரர்கள் மீதும், ஹஜ்ஜாஜின் படைகளின் கவன் கற்கள் மழையாகப் பொழிந்து கொண்டிருக்கும் வேளையில், உனக்கு இங்கு என்ன வேலை மகனே!? என அந்த மூதாட்டி, கணீரென்ற குரலில் தன் மகனை நோக்கி ஒரு கேள்விக் கணையை வீசுகின்றார். அந்த மூதாட்டியிடம் இஸ்லாமிய வீரத்தின் அடித்தளம் உறுதியாக இருந்த காரணத்தால், புறக்கண்ணை இழந்த நிலையிலும் அகக்கண் ஒளி வீசிக் கொண்டிருந்ததை, அவரது கேள்விக்கணை உணர்த்தியது. ஆம்!! அவரது ஈமானின் உறுதியை இஸ்லாத்தினுடைய ஆரம்ப கட்டத்திலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் போற்றிக் கூறி, அவரைப் பெருமைப்படுத்தியும் இருக்கின்றார்கள். அந்த ஈமானிய நெஞ்சத்திற்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல. அஸ்மா பின்த் அபுபக்கர் அவர்களே!!

தாயின் கேள்விக்கணையின் தாக்கத்தில் இருந்து சிறிது சுதாரித்தபின், தாயே!! உங்களிடம் சில அறிவுரைகள் பெற்றுச் செல்லவே வந்திருக்கின்றேன். என்னிடம் அறிவுரை பெற்றுச் செல்ல வந்திருக்கின்றாயா? எதைப்பற்றி? என மீண்டும் தொனியில் வேகம் மாறாமல் மகனை நோக்கி கேள்விக்கணையை வீசினார் அஸ்மா (ரலி) அவர்கள்.

ஹஜ்ஜாஜ் அவர்களின் மீதுள்ள பயத்தின் காரணமாக அல்லது அவர் அறிவித்த பேரங்களுக்கு ஆசைப்பட்டு, எல்லோரும் என்னை தனிமையில் விட்டு விட்டனர். என்னுடைய குடும்பமும், பிள்ளைகளும் கூட என்னை விட்டுச் சென்று விட்டார்கள். என்னுடன் உறுதியாக நிலைகுலையாமல் இருக்கும் சின்னஞ்சிறு கூட்டமோ, ஹஜ்ஜாஜ் அவர்களின் படையை இன்னும் சில மணிநேரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலையில், பனூ உமைய்யா கோத்திரத்தவர்களின் தூதுவர்கள், இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் தருவதாகவும், அதற்குப் பதிலாக அப்துல் மாலிக் இப்னு மர்வானைக் கலிபாவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், என்னிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதைக் கேட்ட அஸ்மா (ரலி) அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. யா! அப்துல்லா.. ..!! இது உன்னுடைய சொந்த விவகாரம். எது நல்லது என்று உனக்கு நன்றாகத் தெரியும். நீ நேர்வழியில் இருக்கின்றாய் என்பதை உணர்வாயானால், உண்மையின் பக்கமே நீ நிலைத்திரு. உன்னைப் பாதுகாப்பதற்காக தன்னுடைய இன்னுயிரையும் தந்தார்களே அவர்களைப் போல உன்னுடன் போரிடுபவர்களுக்கும் நீ பாதுகாப்புக் கொடு. இதை விட்டு விட்டு உலக ஆசைகளுக்கு அடிபணிந்து விடுவாயானால், என்ன கைசேதமடா மகனே! நீ உன்னை மட்டுமல்ல, உன்னை நம்பி இருக்கும் உன்னுடைய தோழர்களையும் அல்லவா அழித்து விடப்பார்க்கின்றாய்.

அம்மா.. .. என்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!!

ஹஜ்ஜாஜின் படைக்கு முன் நீ அடிபணிவதை விட, நீ கொல்லப்படுவதே மிகச் சிறந்தது மகனே!! என்ன..!! பனு உமைய்யாக்களின் அடிவருடிகள் சிலர் உன் தலையை வைத்து சிறிது விளையாடக் கூடும்!!

என்னுடைய மரணத்தைப் பற்றி நான் அஞ்சவில்லை. அவர்கள் என்னுடைய உடலை அங்கஹீனப்படுத்தி விடுவார்களோ என்று தான் பயப்படுகின்றேன். மகனே! மரணத்திற்குப் பின் மனிதன் பயந்து என்ன ஆகப் போகின்றது. அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரிப்பதனால், ஆட்டுக்கு என்ன வலியா தெரியப் போகின்றது!!?

தன் தாயைப் பற்றிய பெருமிதம் பொங்க!! தாயே!! உங்களை என் தாயாராகப் பெற்றதே நான் செய்த பெரும்பாக்கியம். இது வரை என்னுடைய செவிகள் எதைக் கேட்டதுவோ, அவற்றைக் கேட்கவே உங்கள் முன் வந்தேன். இறைவன் என்னுடைய மனதை அறிவான். பயந்தோ அல்லது பலவீனம் கொண்டோ கோழையாக உங்கள் முன் வரவில்லை. இந்த உலக ஆதாயங்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும் என் மனம் தடுமாறவில்லை, மாறாக இறைவன் தரவிருக்கின்ற அளவில்லாத அருட்கொடைகளின் மீதே என் மனம் விருப்பம் கொண்டுள்ளது, என்பதற்கு அவனே சாட்சியாக இருக்கப் போதுமானவன் தாயே!! இப்பொழுது, உங்கள் மனதிற்கு எது குளிர்ச்சியைத் தரவிருக்கின்றதோ அதைச் செய்யவே புறப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். நான் கொல்லப்பட்டு விட்டால், நீங்கள் வருத்தமடைய வேண்டாம். மாறாக, எனக்காக இறைவனிடம் துஆச் செய்யுங்கள். தாயே!!

என்ன சொன்னாய். யா! அப்துல்லா!! வருத்தமடைவேனா!? நீ அற்ப காரியத்திற்காகக் கொல்லப்பட்டால் தான் இந்தத் தாயுள்ளம் வருத்தமடையுமே ஒழிய! வீர மரணத்திற்கு இந்த தாய் வருத்தப்பட மாட்டாள். தாயே! உங்கள் மகன் வீணுக்காக பிறருக்கு ஒத்துழைப்பவனோ அல்லது அக்கிரமம் செய்வதற்கு உடன்படுபவனோ அல்லது அநீதியிழைப்பதற்காகவோ அல்லது ஒரு முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் அல்லாதவனுக்குத் துன்பம் இழைப்பதற்காகவோ உடன்படுபவன் அல்ல, மாறாக, அந்த இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக வேண்டி நற்செயல்கள் புரிவதற்காக மட்டுமே உங்கள் மகன் போரிடுவான் தாயே!! என்னை நீங்கள் குற்றம் பிடிப்பீர்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. உங்களுடைய மனதை திடப்படுத்திக் கொள்ளச் செய்வதற்காக அன்றி, வேறெதற்காகவும் நான் இங்கு வரவில்லை என்பதை இறைவன் மிக அறிந்தவன்.

இறைவன் என்ன விரும்புகின்றானோ அதன் மீதும், நான் என்ன விரும்புகின்றேனோ அதன் மீதும், உன்னுடைய செயல்பாட்டை அமைத்துக் கொள். இறைவனுக்கே எல்லாப் புகழும். சற்று என்னருகில் நெருங்கி வா மகனே!! உன்னுடைய உடலையும், உன்னுடைய மேனியின் நறுமணத்தையும் ஒரு முறை நான் நுகர்ந்து கொள்கின்றேன். இதுவே நானும் நீயும் ஆரத்தழுவும் கடைசிச் சந்திப்பாகவும் இருக்கலாம் அல்லவா? அப்துல்லா தன் தாயின் அருகில் சென்று முழந்தாளிடுகின்றார். கண் தெரியாத அந்தத் தாயுள்ளம் தன் மகனின் தலையையும் உடலையும் ஒரு சேரத் தழுவுகின்றது. அஸ்மா (ரலி) அவர்களின் கைகள், தன் மகனின் தலை, முகம், கழுத்து என அலை பாய்ந்து கொண்டிருக்க, உதடுகள் தன் மகனின் உச்சி முதல் ஆரம்பித்து, முத்த மழை பொழிந்து கொண்டிருக்க, திடீரென, தன் மகனை விட்டு விட்டு எட்ட நகர்ந்து விடுகின்றார் அஸ்மா (ரலி) அவர்கள். யா! அப்துல்லா!! நீ அணிந்து கொண்டிருப்பது எது? மார்புக்கவசங்கள் தாயே!! என்கின்றார் அப்துல்லா!! மரணத்தை விரும்பக் கூடியவனுக்கு எதற்கு மார்புக் கவசங்கள் மகனே!! அதை கழற்றி விடு. மார்புக் கவசங்கள் உன்னுடைய வாள் வீச்சின் வேகத்தையும், போர்த் திறனையும் மட்டுப்படுத்தி விடும். அதற்குப் பதிலாக நீ இறந்தாலும், உன்னுடைய மறைவிடங்கள் வெளிப்படாத அளவுக்கு, இந்த கால் சட்டையை அணிந்து கொண்டு, போருக்குப் புறப்படு மகனே!! அப்துல்லா அவர்கள் தன்னுடைய தாயாரின் அறிவுரைகளைக் கேட்டு, மார்புக் கவசங்களைக் கழற்றி விட்டு, கால் சட்டையை அணிந்து கொண்டு, கஃபாவில் இருக்கும் தன்னுடைய தோழர்களை நோக்கிச் செல்ல, புறப்படத் தயாராகின்றார். இறுதியில், என்னுடைய தாயார் அவர்களே, உங்களுடைய துஆவில் என்னை நினைவு கூற மறந்து விடாதீர்கள் என்று கூறவும், அஸ்மா (ரலி) அவர்களின் கைகள் வானத்தை நோக்கி உயர்கின்றன. யா அல்லாஹ்!! அனைவரும் துயில் கொண்டிருக்கக் கூடிய அந்த நேரத்தில் உன்னுடைய அருளை வேண்டி நீண்ட நேரம் விழித்திருந்து, உனது அருளுக்காக அழுகின்றார்களே அவர்கள் மீது உன்னுடைய கருணையைப் பொழிவாயாக!! யா அல்லாஹ்!! மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையே தங்களது பயணத்தின் போது, யார் தாகித்;தும், பசித்தும் இருந்தார்களோ அவர்களுக்கும் நீ அருள்புரிவாயாக!! யா அல்லாஹ்!! உன்னுடைய பாதையில் என் மகனை அற்பணித்துள்ளேன். அவனுக்கு நீ எதனைப் பொருந்திக் கொண்டாயோ அவற்றை நான் புகழ்கின்றேன். என்னுடைய பொறுமைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பதிலாக நீ எனக்கு நற்கூலி வழங்குவாயாக!! என்று தன்னுடைய பிரார்த்தனையை முடிக்கின்றார்கள்.

அன்றைய பொழுது சாய்வதற்குள், அப்துல்லாவின் உடல் மக்காவின் புழுதிகளில் தவழ்ந்து விடுகின்றது. அப்துல்லாவின் உடல் எதிரிகளால் கலுமரத்தில் தொங்க விடப்பட்டிருக்கின்றது என்ற செய்தி கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் தன் மகனின் உடல் தொங்க விடப்பட்டிருக்கும் கலுமரத்தை நோக்கிச் செல்கின்றார்கள். ஹஜ்ஜாஜினுடைய ஆட்களிடம் போராடிப் பெற்று, தன் மகனது உடலை நல்லடக்கம் செய்து விட்டு, தன் மகன் இறந்த பத்தாவது நாளில், தன்னுடைய நூறாவது வயதில் அஸ்மா (ரலி) அவர்களும் இறந்து விடுகின்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அந்த வீரத்தாய் பெற்றெடுத்த அப்துல்லா பின் ஸுபைர் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், அந்த வீரத்தாய் அஸ்மா (ரலி) அவர்கள் இன்றைய அன்னையர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றார்கள். இன்று இருக்கும் தாய்மார்களுக்கு உலக ஆசைகள் முன்னால் வந்து, தன் மகனை இறைவழியில் செல்வதிலிருந்து எவ்வாரெல்லாம் தடுக்கலாம் என்ற சிந்தனையிலேயே தங்களது நேரங்களைச் செலவழிக்கின்றார்கள். அதற்கும் மேலாக, நீ எங்கு வேண்டுமானாலும் போ, அது உன் இஷ;டம். எங்களது வாழ்வுக்கான பொருளாதாரத்தைச் சேர்த்து வைத்து விட்டு, நீ போவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற பதிலைத் தருகின்றார்கள். அன்றைய அஸ்மாக்களைப் பார்த்து இன்றைய அம்மாக்கள் திருந்துவார்களா?!!
www.a1realism.com

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template