Sunday, April 27, 2008

யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF)


யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 20.04.2008 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் A.M ஷாஃபி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் A.M. அன்வர் அறிமுக உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அ. முஹம்மது யூஸுஃப் சிறப்புரையாற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கல்வி வளர்ச்சி, மாணவர்களின் மேம்பாடு, யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் வளர்ச்சி ஆகியவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27%இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் ஒரு மைல்கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனையாக வைக்கா மல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனைக் கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக, உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.

2. இந்த 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும், இன்னும் இதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு இடஒதுக்கீடு கிடைக்க அழுத்தம் தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் யு.எஸ்.எஃப். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. நமது தேசத்தில் முஸ்லிம்கள் கல்வி, சமூக பொருளாதார ரீதியாக மிகவும் கீழான நிலையில் இருப்பதாகவும், முன்னேற்றப் பட வேண்டிய சமூகத்தில் மிகமுக்கிய பங்கை இந்த முஸ்லிம் சமூகம் வகிக்கின்றது என்றும் சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. வல்லரசு என்ற ஸ்தானத்தை எட்ட பீடுநடை போட்டுக் கொண்டி ருக்கும் நமது தேசத்தின் குடிமக்களில் ஒரு பகுதியினராகிய முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருப்பது நமது தேசத்தின் பயணத்தில் ஊனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஆகவே இந்த நிலையைக் களைய மத்திய அரசு உடனடியாக 15% தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கி இந்த தேசத்தில் ஏற்பட்டுள்ள ஊனத்தை சரி செய்ய வேண்டும் என யு.எஸ்.எஃப். மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

4. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு மாவட்டந்தோறும் முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகளை (HOSTEL) கட்டித்தர வேண்டும் என்றம் அதில் முதற்கட்டமாக சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் வரும் 2008 2009 கல்வியாண்டு முடிவிற்குள் கட்டித்தர வேண்டுமென்றும், முஸ்லிம் மாணவ, மாணவியரின் இந்தக் கல்வி நலத்திட்ட அபிவிருத்திப் பணியில் சுணக்கம் காட்டாமல், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டு
ம் என்றும் யு.எஸ்.எஃப். தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

5. மாணவ சமுதாயத்தின் எதிர்கால இலட்சியத்தை வளமாக்கும் விதமாக, பத்தாவது மற்றும் +2 வுக்குப் பிறகு என்ன படிப்பது? என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூலை ரூ 3/ நன்கொடையில் வழங்குவது என்றும் சிறந்த கல்வியாளர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்டு மேற்படிப்பு வழிகாட்டி முகாம்களை மாவட்டம்தோறும்நடத்தி அதில் இந்த நூலை வெளியிடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


இப்படிக்கு,
அ. முஹம்மது யூஸுஃப்,
மாநிலத் தலைவர்,

யு.எஸ்.எஃப்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template