Sunday, June 01, 2008

மியான்மார் புயலில் நாற்பதாயிரம் தமிழர்கள் சாவு!


மியான்மார் புயலில் நாற்பதாயிரம் தமிழர்கள் சாவு!

மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

"நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மியான்மாரில் ஐராவதி டெல்டா பகுதியும், பகோ மகாணமும், யங்கூனைச் சுற்றியுள்ள பகுதிகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் யாவும் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளாகும். தமிழர்களின் கிராமங்களான தங்கி, திங்காஜுன், டவுன்டகோன் முதலியவை முற்றாக அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


பகோ மாகாணத்தில் ஐம்பது சதவீதத்திக்கும் அதிகமாகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யங்கூனில் சுமார் இருபது சதவீதம் தமிழர்கள் உள்ளனர். இது தவிர பிலிக்கான், டகோன், டாகிடா, எரியா, டகோமியா முதலான தமிழர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மியான்மாரில் தற்போது சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் நாற்பதாயிரம் பேர் "நர்கீஸ்" புயலுக்கு பலியாகி இருப்பது மிகப் பெரும் துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

மியான்மாரில் இராணுவம் சரிவர மீட்புப் பணிகளை செய்யாததால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. உப்பு ஒரு கிலோ மியான்மார் பணத்தில் 1500 ருபாய் விற்கிறது. ஒரு லீட்டர் குடி தண்ணீர் மியான்மார் பணத்தில் 1200 ருபாய். பால் பவுடரின் விலையோ ஒரு கிலோ பத்தாயிரத்திற்கும் அதிகம்.

மியான்மாரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் மணிப்பூர் மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் திரு, சேகர், செயலாளர் ரவிச்சந்திரன், அதன் நிறுவனர்களுள் ஒருவரான திரு யூசுப், மணிப்பூர் மாநிலம் மோரே மாவட்டத்தில் சப் கலெக்டராகப் பணிபுரியும் திருமதி ஜெசிந்தா லசாரஸ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இத் தகவல்களை உறுதிப்படுத்துகின்றனர்.

மியான்மாரில் வசிக்கும் தமிழர்கள் உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் மேலும் உயிர் இழப்புக்களை சந்திக்கும் அவல நிலையில் உள்ளனர்.

இத் தகவல்களை தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயற்கைச் சீற்றங்களும் தமிழர்களுக்கு அழிவைக் கொடுத்துக் கொண்டிருப்பது சோகமான விடயம். மியான்மாரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் தம்மாலான உதவிகளை செய்ய முன் வரவேண்டும்.

நன்றி : இணையம்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template