Saturday, February 07, 2009

த.மு.மு.க வின் மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்
மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம்


தாம்பரம், பிப்.8-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

வாகனங்களில் வருகை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா மாநாடு சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று நடந்தது. இதற்காக தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்,வேன், கார்களில் ஆயிரக்கணக்கில் த.மு.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஆயிரத்துக்கும் மேலானோர், வாகனங்களில் வந்ததால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போலீசாருடன் த.மு.மு.க. தொண்டர் அணியினர் இணைந்து பணியாற்றினர். மாநாட்டையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புதிய கட்சி உதயம்

மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழாவையொட்டி நேற்று காலையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது தலைமையில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் ஹாஜா கனி வரவேற்றார்.

பேராசிரியர் அ.மார்க்ஸ், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகீர், அருள் ஆனந்த், கஜேந்திரன், தேவநேயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

மாலையில், மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. த.மு.மு.க. முன்னாள் பொருளாளர் சையத் நிசார் அகமது, மனித நேய மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நெல்லை மாவட்ட ஜமாஅதிதுல் உலமா தலைவர் மவ்லவி சலாஹுத்தீன் ரியாஜி, பேராயர் எஸ்றா சற்குணம், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் எஸ்.என்.நடராஜன், பழங்குடி மக்கள் தேசிய பிரதிநிதி சுரேஷ் சுவாமி காணி, அஹிலுஸ் ஸிண்ணா ஆய்வு மைய நிறுவனர் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதன் பின் மனித நேய மக்கள் கட்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. கட்சி தொடங்கி வைக்கப்பட்டது குறித்து த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வக்பு வாரிய தலைவரும், த.மு.மு.க. பொதுச் செயலாளருமான ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். த.மு.மு.க. பொருளாளர் ரஹ்மத்துல்லா, துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மாநில செயலாளர்கள், நிர்வாகிகள் பேசினர். மாநாட்டின் ஒழுங்குபடுத்தும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட த.மு.மு.க. செயலாளர் யாக்கூப் தலைமையில் த.மு.மு.க.வினர் செய்திருந்தனர். முடிவில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் மீரான் மொய்தீன் நன்றி கூறினார்.

சுத்தப்படுத்துவோம்

மாநாட்டில் த.மு.மு.க. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது, `ஒரு முஸ்லிம் என்ற முறையில் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பது நமது கடமையாகும். அரசியல் சாக்கடை என்று சொல்லி நாம் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது. இந்த சாக்கடையை சுத்தப்படுத்தும் தலையாய பணி நமக்கு இருக்கிறது. நமது நாட்டின் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும் மனித நேய கட்சி உதயமாகியுள்ளது' என்று கூறினார்.

போரை நிறுத்தவேண்டும்

மேலும், தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத செயல்கள், தடுப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நன்றி : தினத்தந்தி

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template