பகிரங்க சவாலுக்கு பகிரங்க பதில்
தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் தக்லீத் வளர்க்கப் புதிதாக உருவான ஒரு குழு உண்மை உதயத்தின் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ என்ற கட்டுரை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களது அழைப்புக்கு எமது பதில் இதுதான்.
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
‘அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், ‘ஸலாம்’ எனக் கூறுவார்கள்.’ (25:63)
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
‘(நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக!’ (7:199)
இந்த ஆயத்துக்களின் அடிப்படையில் நாம் இவர்களுக்கு ஸலாம் கூறி இவர்களைப் புறக்கணிக்கின்றோம்.
இதுவே இவர்களுக்கு எமது பதில். எனினும், இத்துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்ட ஏனைய சகோதரர்களுக்காக சில குறிப்புகள்:
‘உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்’ என்று எழுதியுள்ளனர். உண்மை உதயம் இந்நாட்டில் (இலங்கை) நீண்ட காலமாக குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வெளிவரும் ஓர் இதழாகும். பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக ஒரு கருத்து எழுதினால் இருளை உதயமாக்கும் என விமர்ச்சிக்கின்றனரே! இதன் அர்த்தம் என்ன? இது வரை நாம் எழுதிய குர்ஆன்-ஹதீஸ் அனைத்தும் இருளாகி விட்டனவா?
இது வரை இருளை உதயமாக்கினால் ஏன் அப்போது இந்தப் பகிரங்க சவால் வெளிவரவில்லை? இவ்வாறு சிந்திக்கும் போது பி.ஜெய்னுலாப்தீனுக்கு மாற்றமாக யார் பேசினாலும் அவரின் அனைத்துக் கருத்துக்களும் பிழையானவை; பி.ஜெய்னுலாப்தீன் சொல்லும் அனைத்துக் கருத்துக்களும் உண்மையானவை என்ற வெறி உணர்வு இவர்களிடம் மேலோங்கி இருப்பதை அறியலாம்.
அல்லது நாம் இது வரை எழுதிய அனைத்தும் பிழையானவை என்பது அவர்களது கருத்தாயின் மார்க்கத்துக்கு முரணாக எழுதினாலும் பரவாயில்லை; பொறுத்துக்கொள்வோம். பி.ஜெய்னுலாப்தீனுக்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற பி.ஜெய்னுலாப்தீன் பித்து தான் அவர்களை அப்பொழுது இப்படி சவால் விட வைத்துள்ளதோ?
அடுத்து, ‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை எவராலும் செய்யவும் முடியாது. இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்’ என்று எழுதியுள்ளனர்.
நாமும் தவ்ஹீத் ஜமாஅத்துத்தான; அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், IAT , ஸபாப், IIRO போன்ற அனைவரும் தவ்ஹீத்வாதிகள்தாம். இன்றோ, நேற்றோ சிலர் இணைந்து ஒட்டுமொத்த தவ்ஹீத்வாதிகளும் நாம்தாம் என்ற தோரணையில் எழுதுகின்றார்கள் என்றால் இந்நாட்டின் (இலங்கை) தவ்ஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்கள் எப்படி நியாயமானவர்களாக இருப்பார்கள்?
பி.ஜெய்னுலாப்தீனின் ஒரு கருத்துக்கு முரண்பட்டதால் பொய்களை உதயமாக்கும் என நடுநிலையில்லாது நாகரிகமில்லாது, நியாய உணர்வில்லாது செயல்படும் இத்தகையவர்களைப் புறக்கணிப்பதே வழியாகும்.
தவ்ஹீதின் பெயரில் தக்லீதையும், தனிநபர் வழிபாட்டையும் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழு குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அன்புடன்,
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர், உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்
நன்றி
0 மறுமொழிகள்:
Post a Comment