எந்த அணிக்கு ஆதரவு ? ஏப்.,5ல் முடிவு : இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பேட்டி
மதுரை : முஸ்லிம்களுக்கு போதுமான தனி இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று இந்திய தவ்ஹீத்ஜமாத் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்த முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு இந்திய அளவில் இன்றுவரை செயல்படுத்தவில்லை. அவர்கள் அமைத்த ராஜேந்திர சச்சார் கமிஷன் முஸ்லிம்களின் நிலை குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்ததும் கிடப்பில் போடப்பட்டது. நாங்கள் அவர்களுக்கு அளித்த ஓட்டுகள் விரயமாகிவிட்டன. அதேசமயம் 3வது அணியையும் நம்பமுடியவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் நாங்கள் எந்த அணியில் இருப்பது என்பதை ஏப்., 5ல் தஞ்சையில் நடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தெளிவாக அறிவிப்போம்.
எங்களுக்கு உறுதி தரும் கட்சிகள் அதை எழுத்துப் பூர்வமாக தரவேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதல்ல. தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வருண்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தற்போது பிராந்திய கட்சிகள் முக்கியத்துவம் பெறுவது நல்லதுதான். மத்திய அரசில் தமிழக கட்சிகள் இடம் பெற்றதால் தான் நல்ல திட்டங்கள் நமக்கு கிடைத்தன. இலங்கை பிரச்னையை ஜெயலலிதா கையில் எடுத்த பின் அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.செயலர் ஜாகீர், பொருளாளர் அபுபக்கர், மாவட்டத் தலைவர் அப்துல்காதர் உடனிருந்தனர்.
நன்றி : தினமலர்
Sunday, March 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment