Sunday, April 12, 2009

பேரா.காதர் மொயதீனுக்கு ஆப்பு வைத்தது யார்?

இ.யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் குழப்பம் ஏன்?
-டாக்டர் சித்தீக், ஐக்கிய அரபு அமீரகம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளரும், அதன் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொய்தீன் வேலூர் தொகுதி வேட்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டார்.

அப்படி அறிவிக்கப்பட்டபோது காதர் மொய்தீன் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் கட்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலர் தன்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்ததை நினைவுபடுத்தியும், நாடாளுமன்ற நிகழ்வுகளில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே அவர்களுடன் பகிர்ந்து கலந்து கொள்ள முடியும் என்று கூறியதோடு, இம்முறை ஏணி சின்னத்தில் (கேரள முஸ்லிம் லீக்கின் அங்கீகரிக்கப்பட்ட சின்னம்) நிற்பதாக அறிவித்தார்.

அறிவிப்பு செய்யப்பட்ட சில நாட்களிலேயே மிகப் பெரும் மாற்றங்கள். வேட்பாளரான காதர் மொய்தீனே மாறிவிட்டார்.

இதன்மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுகவில் அடகு வைக்கப்பட்ட ஒரு இயக்கம், அதற்கென்று எந்தவித அங்கீகாரமும் இல்லையென்ற கூற்று இப்பொழுது உண்மையாகி விட்டது. ஏணி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த தனது ஆதரவாளரான காதர் மொய்தீனையே முதல்வர் கருணாநிதி ஓரம் கட்டி விட்டார்.

காதர் மொய்தீன் கட்சியை சரியான முறையில் நடத்தவில்லை, உதயசூரியன் சின்னத்தில் நின்று தன்னை திமுகவின் சிறுபான்மை பிரிவு இயக்க உறுப்பினர் என்று நிரூபித்து விட்டார்…இப்படியெல்லாம் குறை கூறிக் கொண்டு துபாய், காயிதே மில்லத் பேரவை மற்றும் பல அமைப்புகளில் அமீரக புரவலர்கள் பலத்தால் தன்னை நிலைநிறுத்துக் கொண்ட அப்துல் ரஹ்மான், தற்போது தமிழ்நாட்டில் கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, எந்த உதயசூரியன் சின்னம் வேண்டாம் என்று சொன்னாரோ அதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்திருப்பது சுயநல அரசியலின் உச்சகட்டம்!.

அதுமட்டுமின்றி காதர் மொய்தீன் ஆசியால் அமைச்சர்கள் துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, இன்று காதர் மொய்தீனையே ஒதுக்கிவிட்டு போட்டியிடும் அளவிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு, அதில் சாதித்தும் விட்டார்.

காதர் மொய்தீன் போட்டியிடாவிட்டால், அவருக்குப் பதிலாக பிற தகுயான வேட்பாளர் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் மறைந்த அப்துஸ் சமத் அவர்களின் மகளான பாத்திமா முஸப்பர் எல்லா தரப்பு மக்களிடமும் மிகவும் பரிச்சயமானவர், மத நல்லிணக்கம் மற்றும் சமய ஒற்றுமைக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர். ஆனால் இவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதே போல கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர். சையத் சத்தார். இவர் வேலூர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மக்கள் மத்தியில் பிரபல்யமான இவரும் புறம் தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வடக்கு கோட்டை ஹாஜியார் பொருளாளராக நியமிக்கப்பட்டு கட்சிக்கு வலுவூட்டினார். ஆனால் அந்தோ பரிதாபம்! இவரும் மிக நளினமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

இன்னும் ஆரம்ப காலம் முதல் கட்சிக்காக தனது உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்த ஏழை நெல்லை மஜீது மற்றும் அவரைப் போன்றவர்களும் பொருளாதார பலமில்லாததால் ஒதுக்கப்பட்டுவிட்டனர்.

மொத்தத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திமுக தலைவர் கருணாநிதியின் கைப்பாவையாகிவிட்ட உண்மை உறுதியாகி விட்டது. வேட்பாளரையே மாண்புமிகு அமைச்சர்கள் ஸ்டாலினும், துரைமுருகனும், கலைஞரும் தான் முடிவு செய்கின்றனர்.

இந் நிலையில் முஸ்லிம் லீக் எப்படி ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக மாறும்?
இந்த குற்றச்சாட்டு தவறு!:ஒருமனதாக தேர்வானார் ரஹ்மான்:

இந் நிலையில் அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு எமிரேட்டில் இயங்கும் காயிதே மில்லத் பேரவையின் இணைச் செயலாளர் ஹமீத் ரஹ்மான் அனுப்பியுள்ள விளக்கத்தில்,

இந்தக் கட்டுரையை வெளியிடும் முன் எங்கள் கருத்தையும் கேட்டிருக்கலாம். அப்துல் ரஹ்மானுக்குப் பிடிக்காதவர்கள் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கலாம். இந்தச் செய்தியில் உண்மையில்லை.

தமி்ழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் செயற் குழுக் கூட்டத்தில் தான் அப்துல் ரஹ்மான் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கூட்டத்தி்ல் டாக்டர் சத்தார், பாத்திமா முஸாபர் ஆகியோரும் இருந்தனர் என்று கூறியுள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template