Friday, September 18, 2009

விடைபெறும் ரமலான்....

விடைபெறும் ரமலான்....
நன்மைகளை அள்ளித்தந்த புனித ரமலான் மாதம் நம்மைவிட்டு விடைபெறுகிறது. நாம் அலாஹ்வுக்காக பசித்திருந்து, உணர்வுகளை கட்டுப்படுத்தி, உள்ளங்களை ஓர்மைபடுத்தி, செயல்களை பக்குவப்படுத்தி, வணக்கவழிபாடுகளில் அதிகம் ஈடுபட்டு அவனது மன்னிப்பை பெற ஏங்கிய அந்த அருள் நிறைந்த ரமலான் நம்மை விட்டும் விடைபெறுகிறது. "ரமலானில் உம்ரா என்னுடன் ஹஜ் செய்தது போல்" என்ற நபிகளாரின் வார்த்தையை தாங்கி நின்று அந்த பெரும் பேற்றினை தந்த ரமலான் விடைபெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாம் "லைலத்துல்கத்ரை" தனதாக்கிய ரமலான் விடைபெறுகிறது. உலக வழிகாட்டி பொது மறையை பெற்றுத் தந்த ரமலான் விடைபெறுகிறது. இவ்வளவு மகிமைகளையும் தன்னகத்தே கொண்ட புனித ரமலானில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் வல்ல ரப்புல் ஆலமீன் ஏற்றுக்கொள்ளவும், நாம் ஏதேனும் தவறுகள் / பாவங்கள் செய்து இருந்தால் அதையும் அந்த வல்ல ரஹ்மான் மன்னித்தருளவும் அவனிடம் அழுது மன்றாடுவோம். நன்மைகள் பூத்துக்குலுங்கிய ரமலான் நம்மிடமிருந்து விடைபெற்றாலும் அது ஈன்ற அருள்மறை குர்ஆன் நம்மிடமுள்ளது. அதை பின்பற்றி அதனை தனது வாழ்வியலாக்கிக்கொண்ட அருமை நபியின் அடியொற்றி வாழ்ந்து அல்லாஹ்வின் அருள் பெறுவோம் அர்ரஹ்மானின் அர்ஷில் நிழல் பெறுவோம். பெருநாள் தர்மம் மேலும் ஸதக்கதுல்ஃபித்ரா என்ற நோன்புப்பெருநாள் தர்மத்தையும் நாம் மறக்காமல் கொடுக்க பனிக்கப்பட்டுள்ளோம். இன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை பெருநாள் தர்மத்தை கொடுக்க ஏவப்பட்டுள்ளார்கள்.
நோன்பு வைத்தவர் வீண் காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டும் யார் அதை பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும், தொழுகைக்கு பிறகு நிறைவேற்றினால் சாதாரண தர்மமாக அமையும்" என்றும் நோன்புப்பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கடமையாக்கிவிட்டுச்சென்றுள்ளார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது) அண்ணல் நபியின் அறிவுரைப்படி உரிய நேரத்தில் நோன்புப்பெருநாள் தர்மத்தைக்கொடுத்து ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் சிரிப்பில் நாம் இறைவனைக்காண்போம். இறைவேதம் மற்றும் நபி போதனையை மட்டுமே பின்பற்றி நடக்கும் நன் மக்களாக வாழ்ந்து நம்மை மரணிக்க செய்வானாக அந்த ரப்புல் ஆலமீன்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template