Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Friday, October 02, 2009

அரசு உதவித்தொகை பெற உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் சேரவாய்ப்பு: ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் தகவல்

ராமநாதபுரம், செப். 26-

சிறுபான்மையினர் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைய உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் சேர்க்கை தற்போது வக்புவாரிய ஆய்வாளர் மூலமாக நடைபெற்று வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணம், முதியோர் உதவித்தொகை மற்றும் இயற்கை, மரணம், விபத்தால் மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய பல நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் 18 வயது நிறைவு செய்து 60 வயத்துக்குட்பட்ட பள்ளி வாசல்கள் மதர்ஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்க்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மோதினார்கள். பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்கஸ் தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த நலவாரியத்தில் உறுப் பினராக பதிவு பெற தகுதியுடைவர்கள்.

உறுப்பினராக பதிவு பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகம் அல்லது வக்புவாரிய ஆய்வாளர் அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று இந்த நலவாரியத்திற்கு உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் போன்ற நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கோ அல்லது வக்புவாரிய ஆய்வாளர், வக்பு கண்காணிப்பாளர்க்கோ அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

நன்றி : மாலைமலர்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template