Tuesday, April 08, 2008

இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்

இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்


சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த ""பந்த்''ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

இந்திய நீதிமன்றங்களின்/நீதிபதிகளின் இந்த முனைப்பு, எல்லா வழக்குகளுக்கும் கிடைப்பதில்லை; அதிலும் பாதிக்கப்பட்டோர் முசுலீம்களாகவோ, தாழ்த்தப்பட்டோராகவோ இருந்து விட்டால், நீதிமன்றங்களின் இயல்பான வேகம்கூடச் சுணங்கிப் போய்விடும். இப்படிப்பட்ட வழக்குகள் விசாரணை கட்டத்தைத் தாண்டவே பல ஆண்டுகள் ஆகிவிடுவதோடு, குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்பவைக்க அரசாங்கமே குழி பறிக்கும். நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்குகள் கூட, இப்படிப்பட்ட அபாயத்தில்தான் சிக்கிக் கொண்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு, மும்பய்க் கலவரம், குஐராத் இனப்படுகொலை, கோவை இந்துவெறி கலவரம் என நீளும் இந்தப் பட்டியலில், ""துலினா படுகொலை வழக்கும்'' சேர்ந்து விட்டது.

அரியானா மாநிலம், ஜஜ்ஜார் நகருக்கு அருகில் உள்ள துலினா புறக்காவல் நிலையம் முன்பாக, வீரேந்தர், தயாசந்த், டோடாராம், ராஜூ, கைலாஷ் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து மதப் பயங்கரவாதிகளாலும், மேல்சாதி வெறியர்களாலும் அக்.15, 2002 அன்று அடித்தே கொல்லப்பட்டனர். ""அந்த ஐந்து இளைஞர்களும் பசு மாட்டைக் கொன்று, அதன் தோலை உரிப்பதாக'' வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் மேல்சாதி வெறியர்களைத் தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இப்படுகொலையைச் செய்தது என்பதும் ஜஜ்ஜார் நகர போலீசார் இதற்குப் பக்கபலமாக இருந்துள்ளனர் என்பதும், இப்படுகொலை நடந்த ஓரிரு நாட்களிலேயே அம்பலமானது.

இப்படுகொலை பற்றி விசாரிக்க அரியானா மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.ஆர்.பன்ஸ்வால் கமிசனின் விசாரணையில், ""அந்த ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களுள், வீரேந்திரும், தயாசந்தும் தோல் வியாபாரம் செய்வதற்கு அரசு உரிமம் பெற்றவர்கள்; சம்பவம் நடந்த நாளன்று, அவர்கள் ஏற்கெனவே பதப்படுத்தி வைத்திருந்த தோல்களை விற்பதற்குச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். ஜஜ்ஜார் நகர போலீசார், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொலைக் குற்றத்திற்குச் சப்பைக் கட்டும் முகமாகத்தான், "சட்ட விரோதமாக மாட்டுத் தோலை உரித்ததாக' அந்த ஐந்து தாழ்த்தப்பட்டோர் மீதும் பொய் வழக்கு ஜோடித்தனர்'' என்ற உண்மைகள் மீண்டும் சந்தேகத்திடமின்றி நிருபிக்கப்பட்டன.

""தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியவர்கள், போலீசாரைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால்தான், தங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது'' என விசாரணையின் பொழுது கூறி, போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். போலீசாரின் இந்த வடிகட்டிய பொய்யை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட விசாரணை கமிஷன், ""துலினா புறக்காவல் நிலையம் முன்பாக ஒரு பெரும் கும்பல் திரண்டதையும்; அக்கும்பல் இந்து மதவெறியையும், மேல்சாதி வெறியையும் தூண்டிவிடும்படி முழக்கம் போட்டதையும் போலீசார் அனுமதித்தனர். இதன் முடிவில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

""இப்பிரச்சினை மாலை 6.15க்குத் தொடங்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரவு 9.45 மணிக்குத் தொடங்கி 10.15 வரை நடந்திருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கும்பலிடமிருந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காப்பாற்ற போதிய அவகாசம் இருந்தும் கூட, போலீசார் அக்கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பன்ஸ்வால் விசாரணைக் கமிசன் குறிப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் கும்பல் தலைமையில் நடந்த கொலைக்கு, அரியானா போலீசுத்துறை உடந்தையாக இருந்துள்ளது. ஆனாலும், ஜஜ்ஜார் நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், எந்தவொரு போலீசுக்காரன் மீதும் கிரிமினல் குற்றம் சுமத்தப்படவில்லை. ஜஜ்ஜார் நகரின் துணை போலீசு கண்காணிப்பாளர், துலினா புறக்காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 13 போலீசு அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. இவ்விசாரணையின் முடிவில், இந்த 13 போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டு சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என்ற "மாபெரும் தண்டனை' அளிக்கப்பட்டது.

இப்படுகொலை, எதிர்பாராதவிதமாக திடீரென நடந்துவிட்ட சம்பவம் அல்ல. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே, விசுவ இந்து பரிசத்தும் பஜ்ரங்தளும் ""முசுலீம்கள் பசுக்களைக் கொல்கிறார்கள்'' என்ற வதந்தியைப் பரப்பி, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மதக்கலவரங்களை நடத்தி வந்தன. இப்படு கொலை நடந்த மறுநாளே, அவ்விரண்டு அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொன்ற ""எழுச்சியுற்ற இந்துக்களை''ப் பாராட்டி, ஜஜ்ஜார் நகரில் ஊர்வலம் நடத்தின. ""மனித உயிரைவிட, பசுவின் உயிர் விலைமதிப்பற்றது என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன'' என்பதை மேற்கோளாகக் காட்டி, இப்படுகொலையை நியாயப்படுத்தினார், விசுவ இந்து பரிசத்தின் துணைத் தலைவர் ஆசார்யா கிரிராஜ் கிஷோர். ஆனாலும், இப்படுகொலை தொடர்பாக மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களின் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் (ஊர்வலம், பத்திரிகை பேட்டி) தொடர்பாகக்கூட, எந்தவொரு ஆர்.எஸ்.எஸ்.காரன் மீதும் வழக்கு போடப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.ஐப் போலவே முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைப் பரப்புவதில் முனைப்பாகச் செயல்பட்டுவரும் ""ஆரிய சமாஜம்'' என்ற அமைப்பு, ஜஜ்ஜார் நகரில் பசு பராமரிப்பு மையமொன்றை நடத்தி வருகிறது. ""இம்மையத்தின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்துக் கொல்லும் படித் தூண்டிவிட்டதாக'' சில போலீசார் பன்ஸ்வால் கமிசனிடம் சாட்சியம் அளித்துள்ளனர். எனினும், இப்படுகொலையில் அவர்களின் பங்கு பற்றி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, ஆரிய சமாஜம் இப்பசு மையத்தில் நடத்திய சாதி பஞ்சாயத்தில் கலந்துகொண்ட போலீசாரும் அரசு அதிகாரிகளும் இப்படுகொலை தொடர்பாக ""அப்பாவிகளை''க் கைது செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தனர். இந்த வாக்குறுதிக்கு ஏற்ப, இப்படுகொலையில் நேரடித் தொடர்புடைய, அடையாளம் தெரிந்த 14 ""அப்பாவிகளின்'' பெயர்களை முதல் தகவல் அறிக்கையில்கூட சேர்க்காமல், போலீசார் காப்பாற்றிவிட்டனர்.

இப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்னும் விசாரணை கட்டத்தையே தாண்டவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்குக் கூட அரசு தயாராக இல்லை. இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்ட வீரேந்தரின் தந்தை ரத்தன் சிங், விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, "" வழக்கு முடிந்து விட்டதாக''க் கூறி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார், ஒரு போலீசு அதிகாரி.

இவ்வழக்கில் ""நீதி'' நிலை நாட்டப்படுகிறதோ இல்லையோ, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ""அடிமாட்டைக் கூடக் கொல்லக் கூடாது'' என்ற இந்து மதவெறிக் கட்டளையைச் செயல்படுத்துவதில், ஆரிய சமாஜம் இப்படுகொலையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

···


துலினா படுகொலை நடப்பதற்கு 15 ஆண்டுகள் முன்பாக, உ.பி. மாநிலம் மீரட் நகருக்கு அருகில் உள்ள ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 42 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது, இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அரசு பயங்கரவாதிகள் நடத்திய படுகொலை.

பாபர் மசூதிக்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபட, அக்கோயிலின் கதவை இந்துக்களுக்கு ராஜீவ் காந்தி திறந்துவிட்ட பிறகு, 1987 ஏப்ரல்மே மாதங்களில் உ.பி.யிலும், டெல்லியிலும் இந்துமுசுலீம் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன. அந்தச் சமயத்தில், உ.பி. மாநில பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார், ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 50 முசுலீம்களைத் துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். முராத் நகருக்கு அருகில் உள்ள கங்கை கால்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள், நேருக்கு நேராக நிற்க வைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்; குண்டு பாய்ந்த 50 முசுலீம்களின் உடல்களும் கங்கை நதியில் தூக்கி வீசப்பட்டன. ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டில் 42 முசுலீம்கள் மாண்டு போனார்கள். 20 ஆண்டுகாலமாக நடந்துவரும் இந்தப் படுகொலை பற்றிய வழக்கு, வாய்தாவிசாரணை என்ற ஊறுகாய்ப் பானைக்குள் முடங்கிக் கிடக்கிறது.

இப்படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, கொல்லப்பட்ட முசுலீம்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 காக்கிச் சட்டை கிரிமினல்கள் பற்றி சில தகவல்களை அளிக்குமாறு, உ.பி. மாநில லக்னோ போலீசு அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். ஹாஷிம்புரா படுகொலையை விட, அப்படுகொலையில் தொடர்புடைய 19 போலீசார் பற்றி உ.பி. மாநில அரசு அளித்திருக்கும் தகவல்கள்தான் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

· இப்படுகொலை அம்பலமானவுடனேயே, அது பற்றி ""சி.பி.சி.ஐ.டி'' விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசாரணையில், 19 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், அந்தப் போலீசாரின் பணி குறித்த பதிவேட்டில் (Service Register), இக்கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, படுகொலை நடந்த 1987ஆம் ஆண்டில், போலீசாரின் பணி குறித்து தயாரிக்கப்பட்ட வருடாந்திர இரகசிய அறிக்கையில், ""அவர்கள் அந்த ஆண்டில் (1987) மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பதாக''க் குறிப்பிடப்பட்டுள்ளது.

· குற்றம் சுமத்தப்பட்ட இந்த 19 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

· இப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து 1995இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், 19 போலீசாரும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர்.

""அவர்களின் சேவை உ.பி. அரசிற்குத் தேவைப்படுகிறதென்றும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், போலீசாரின் குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டதைத் தடுக்கும் முகமாகத்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும்'' காரணம் கூறப்பட்டுள்ளது.

இப்படுகொலையோடு தொடர்புடைய மற்ற போலீசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்படுகொலை பற்றிய சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை அறிக் கையை வெளியிட மறுத்து வருகிறது, உ.பி. அரசு. கொலைக் குற்றவாளிகளுக்கு இதற்கு மேல் ஒரு அரசினால் என்ன பாதுகாப்பு வழங்கிவிட முடியும்? இந்த நயவஞ்சகத்திற்குப் பதிலாக, உ.பி. அரசு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தால், பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு வழக்குச் செலவாவது மிச்சமாயிருக்கும்!

இந்திய நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றுள், ஒன்றாக இந்த வழக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்தியக் "குடியரசில்', தாழ்த்தப்பட்டோரும், முசுலீம்களும் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான், இந்த வழக்குகள்!

· செல்வம்

நன்றி : தமிழரங்கம்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template