Tuesday, June 30, 2009

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை )

தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.

சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.

1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும். இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.

ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !

இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்! அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?

அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.

40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.

போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27) வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.


தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?

தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள். இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !

பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.

தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி) பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள். எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 2:195) எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக் களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும். தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?

திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத் தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.
ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது? மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா? இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித் துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மை யடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது. இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !

நன்றி : முதுவை ஹிதாயத்

Wednesday, June 24, 2009

சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டார்கள், அவர்களை விட நாம் பெட்டர் - பி.ஜே

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

கடந்த ஞாயிறு (21.06.09) அன்று இமயம் டி.வியில் சகோ. பி.ஜே அவர்கள் இலண்டன் நேயர்கள் ஆன்லைன் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு: .


“கருத்து வேறுபாடுகள் இன்று மட்டுமல்ல, ஸஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. அபூபக்கர், உமருக்கு பின் எல்லா குழப்பங்களும் இருந்தன என்றவர் உமருக்கு எதிராக அவர் மகன் கொடுத்த பத்வாக்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அபூபக்கர் ஆட்சி மட்டும் தான் சரியாக இருந்தது என்றவர் அதையும் தேடி பார்த்தால் குறை தெரியும் என்றார். மேலும் நாம் அடித்து கொள்வதில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டார்கள், வெட்டி கொண்டார்கள், அந்த சமுதாயத்தை விட நம் சமுதாயத்தை அல்லாஹ் பெட்டராக வைத்திருக்கிறான்”


என்று போடு போட்டார். அது போல் அமீர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பத்து பேர் உள்ள ஜமாத்தே இஸ்லாமி எல்லாம் அதற்கு ஒரு அமீர் வைத்திருப்பான். எல்லா அமைப்புகளும் அமீரின் பேச்சை முழுமையாக பின்பற்றுகின்றன. த.த.ஜ மட்டும் தான் குரான் - ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனும் தொனியில் பேசினார்.

த.த.ஜ சொந்தங்களே, குரான் ஹதீஸூக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஓரே உலகளாவிய இயக்கம் எனும் அண்ணனின் வார்த்தை படி சில கேள்விகள். அதற்கு முன் நினைவூட்டலுக்கு ஒர் வாரம் முன் கேட்ட இரு கேள்விகளை மீண்டும் வைக்கிறேன் (அபஸ வதவல்லா சம்பந்தமாக)

1. குறைஷிகள் அவ்வாறு சகோதரத்துவம் ஒன்றை தவிர இஸ்லாத்தில் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்களா ? அதற்கான ஆதாரம்?

2. நபி (ஸல்) குறைஷிகள், அடிமைகள் இருவரையும் ஒன்றாக நடத்த கூடாது என்று எண்ணிணார்களா ? அதற்கான ஆதாரம்?

புதிய கேள்விகள்

3. ஸஹாபாக்களை விட நாம் பெட்டர் ஏனென்றால் நாம் அடித்து கொள்ளவில்லை என்கிறாரே அப்போது தமுமுக - ததஜ, கடையநல்லூர் த.த.ஜ - ஜாக் விவகாரம் எல்லாம் என்ன? வெட்டி கொல்ல வில்லை என்றார் அதிகாரம் கொடுக்க பெற்ற இதர நாடுகள் பாகிஸ்தான், ஆப்கன், ஈராக்கில் வெட்டி கொள்ளவில்லையா?

4.ஸஹாபாக்களிடத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருந்தார்களே? இப்னு உமரும் உமரின் ஆட்சியை ஏற்று தானே இருந்தார்? நாம் ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமோ

5.அலீ (ரலி) யும் ஆயிஷா (ரலி) யும் சண்டை போட்டு கொண்டாலும் போரில் தோற்று போன பிறகு முஃமின்களின் அன்னையை அலீ (ரலி) கண்ணியத்தோடு அனுப்பினார்களே? அவர்களும் இற்க்கும் வரை அதை நினைத்து வருந்தினார்களே? அந்த பண்பு நம்மிடம் உள்ளதா ?

6. ஸஹாபாக்களை எப்படியாவது கீழாக பேசி எதையும் சாதிக்க போவதில்லை. என் தோழர்களை ஏசாதீர்கள். உஹது அளவு தர்மம் செய்தாலும் அவர்களுக்கு ஈடாக மாட்டீர்கள் எனும் நபிமொழி மறந்து விட்டோமா?


7. அல்லாஹ்வையும் அவன் தூதரின் திருப்தியையும் தவிர அனைத்தையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), சுவன நற்செய்தி பெற்ற பிறகும் தன் அமலில் நம்பிக்கை இல்லாமல் முனாபிக் பட்டியலில் தன் பெய்ர் உள்ளதா என கேட்ட உமர்(ரலி), தான் கொடுத்த தர்மத்தின் காரணத்தால் செய்த பாவம் மட்டுமல்ல, செய்யும் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என சொல்லப்பட்ட உஸ்மான் (ரலி), ஹிஜ்ரத்தின் போது உயிரே போய் விடும் அபாயம் இருந்தும் நபிக்கு பதிலாக படுத்த அலீ (ரலி), 100% சொத்தை நபியோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), சொத்து சுகங்களை இழந்து கபனிட கூட துணியின்றி ஷஹீதான முஸைப் (ரலி) இது போன்ற ஸஹாபாக்களை வரலாற்று ஓட்டத்தில் நாம் எங்குமே பார்க்க இயலாது. அப்படியிருக்க அவர்களோடு ஒப்பிடுவோதோ, அல்லது ஒரு சில தவறுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக குறை சொல்வதோ எப்படி சரியாகும்?

த.த.ஜ சொந்தங்களே பதில் சொல்லுங்கள்

அன்பு சகோதரன்
ஃபெரோஸ்கான் (fiverose@gmail.com)

மேலே உள்ள மின்னஞ்சலுக்கு சகோதரர் அபூசுமையா அவர்கள் தான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்கவில்லை இதற்கா பதில் சொல்ல போகிறார்கள் என்று அனுப்பிய ஆதங்க பதில் மின்னஞ்சல்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
அன்புச் சகோதரர் 'ஃபெரோஸ்கான்,

உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!
ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை!

1. கடலூர் முபாஹலா விஷயமாக குர்'ஆனிலிருந்து கேட்ட ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

2. கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு இழைத்த இடையூறு தொடர்பாக ஆதாரம் கேட்டதற்குப் பதிலில்லை.

3. திருவிதாங்கோட்டில் தௌஹீது பள்ளிவாசல் எங்குள்ளது என்பதற்கு இதுவரை பதிலில்லை.

4. உண்டியல் பணம் தொடர்பாக ஜாக்கின் மீது இட்டுக்கட்டி, காட்டிக்கொடுத்ததற்கு இதுவரை பதிலில்லை.

5. தொழுகையில் தொடை தெரியும் படியான ஆடை உடுத்து தொழுவதற்கான ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

6. கேரள தௌஹீது ஜமாஅத்தினர்களான முஜாஹிதீன்கள் குறித்து அவதூறு பேசியதற்கு இதுவரை பதிலில்லை.

7. "தடம் புரண்டவர்கள் பட்டியல்" வைத்ததற்கு இதுவரை விளக்கம் இல்லை.

8. குர்'ஆன் மொழிபெயர்ப்பில் நபி(ஸல்) அவர்கள் கூறாத விஷயத்தை நபிகளின் மீது இட்டுக்கட்டி எழுதியதற்கு இதுவரை பதிலில்லை.

9. கத்தரில் சைபுல்லா ஹாஜாவிற்கு தாயி விசா அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்திற்கு இதுவரை பதிலில்லை.

10. சுனாமி கணக்கில் ததஜ சீருடை வாங்கியதை இணைத்தற்கு இதுவரை பதிலில்லை.

11. அன்னிய பெண்ணுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வது தொடர்பாக இதுவரை பதிலில்லை.

இப்படி எண்ணற்றவை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விவாத மன்னர்களாக பெயர் எடுத்துள்ள ததஜ இயக்கத்திற்குத் தங்களின் செயல்பாடுகள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்து கேட்கப்படுவதற்குப் பதில் இல்லாமல் போவது ஆச்சரியமான விஷயம்.

சகோதரர் அதிரை ஃபாரூக், சகோதரர் அபூ நூறா, சகோதரர் சாதிக், சகோதரர் அமீன், சகோதரர் குமரி முஸ்லிம் என எண்ணற்ற சகோதரர்கள் இணையத்தில் ததஜவுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், தங்கள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது அமைதி காப்பதன் அர்த்தம் ஏனோ?

இதே சம்பவம் ததஜ சகோதரர்கள் மற்றவர்கள் மீது கேள்வி கேட்டு, அவர்கள் அமைதியாக இருந்து விட்டால், "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்ற சொல்லை எத்தனை முறை நாம் இவர்களிடமிருந்து கேட்கவேண்டி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

"பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்பது பூமராங்காக ததஜ சகோதரர்களுக்கே திரும்ப வந்திருப்பது இறைவன் அவர்களின் தலைக்கனம், அகங்காரத்திற்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாக எடுத்துக் கொள்ளலாம்.

"தூய ஏகத்துவத்துக்குச் சொந்தக்காரர்கள்" என சுயமாக பட்டம் சூட்டிக் கொண்டு பெருமை அடித்துக் கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப தங்களின் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிமேலாவது ததஜ சகோதரர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.

என் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாகி ஒதுங்கி விடுவதன் மூலம், இவர்கள் அல்லாஹ்வுக்கு அல்ல, ததஜவுக்கே தக்லீது செய்கின்றனர் என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவ்வாறு அல்ல, ததஜவினர் அல்லாஹ்வுக்கு மட்டுமே தக்லீது செய்வோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது ததஜ சகோதரர்களுக்கு இருக்கிறது.

எனவே, சகோதரர் 'ஃபெரோஸ்கானின் கேள்விகளுக்காவது விளக்கத்தோடு வருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, June 19, 2009

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா
மறு பதிப்பு

இன்றை சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் ‘தக்லீது’ செய்யாதீர்கள். ‘தக்லீது’ குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், தக்லீது செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீஸுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக்கூடாது. அந்நஜாத்தைக் பார்ப்பதும் கூடாது: காரணம் இவை எல்லாம் தக்லீதே ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி நடக்க வேண்டும். இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்ததுதான் ஆகவேண்டும் என்று தக்லீதை நியாயப்படத்த பெரம்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம். ‘தக்லீது’ என்றால் பின்பற்றல் என்ற தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும். ‘தக்லீது’ என்ற அரபி பதம் ‘பின்பற்றல்’ என்ற பொருளை ஒரு போதும் தராது. ஆனால் தலைமுறை, தலைமுறையாகத் ‘தக்லீது’ என்ற அரபி சொல்லுக்குப் ‘பின்பற்றல்’ என்ற தவறான பொருள். சுயநலக்காரர்களால் அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு மக்களிடையேயும் அதுவே வலுவாக வேரூன்றிவிட்டது.

அல்குர்ஆன் வசனங்கள் அனைத்திலும், ஹதீஸ்கள் அனைத்திலும் பல இடங்களில் பின்பற்றுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும் ஒரு இடத்தில் கூட இந்த ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப் படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு விஷயமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான பின்பற்றுதலுக்கும். இந்தத் ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையம் முஸ்லிம்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறேன்.


‘உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்க இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்: அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின்பற்றாதீர்கள்: (எனினும் இதன்படி) நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே’. அல்குர்ஆன் 7;3


இந்த வசனத்தில் ‘வலாதத்தபிவூ’ என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்லீத் என்ற பதம் பயன்படுத்தவில்லை.

‘எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர் (ஸய்யிது) களுக்கும், எங்கள் பெரியார் (அகாபிரீன்)களுக்கும் வழிப்பட்டோம்: அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ (அல்குர்ஆன் 33:67)


நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும் போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிப்படுதல்) ‘அதஃனா’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறாக, தக்லீத் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.


‘அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள். என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’. அல்குர்ஆன் 2:170


இங்கு வழி தவறியவர்களும் ‘நத்தபிவூ’ என்ற பதத்தையே தவறான பின்பற்றுதலுக்குப் பயன்படுத்தியுள்ளதை பார்க்கிறோம். அனால் தக்லீத் என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீஸுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரியான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, ‘தக்லீது’ என்ற பதம் ஓரிடத்தில் பயன்படத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள் உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன்வந்தாலும் குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீதுகளில் ஒரு ஹதீதையோ, பின்பற்றுதலுக்கு ‘தக்லீது’ பதம் செய்ய பயன் படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போது தான் உண்மை உங்களுக்குப் புரிய வரும்.

குர்ஆனில் சூரத்துல் மாயிதாவில் 5:2,97 ஆகிய இரண்டு வசனங்களில், தக்லீதைச் சேர்ந்த ‘கலாயித்’ என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி, மிருகங்களுக்காகப் பயன்படத்தப்பட்டுள்ளது. ஹதீஸுகளிலும் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களைக் ‘கலாயித்’ என்ற அரபி பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


‘தக்லீது’ என்னும் அரபி பதத்தின் மூலம் : கல்லத –யுகல்லிது – தக்லீத்.

கல்லதஹூஃபீகதா, தபிஅஹுமின் ஹ(க)ய்ரி தஅம்முலின் வலாநழ்ரின் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றி ஒருவரைப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.


தக்லீத் தனது மூதாதையர்கள், போதகர்கள், தலைவர்கள் போன்Nறூரை, கொள்கை, கோட்பாடு, கல்வி, செயல்பாடு ஆகியவற்றில் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது

அவர்களின் வேத நூல்களில் பதிலு வெய்யப்படாது. அவர்களின் பாரதிரிகளின் போதனைகளைக் காலங்காலமாக எவ்வித பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும். முன்ஜித்: அரபி மொழி அகராதி

குர்ஆன், ஹதீஸுகளில் காணப்படாத ‘தக்லீது’ பதம் முன்னைய மதவாதிகளால் பயன்படுத்தப்படகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழி கெட்டுச் செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுய நலம் கருதி, இஸ்லாத்தின் இந்தத் தக்லீதை நுழைத்தள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது. இதை நபி(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

எனது சமுதயாத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ராயீல்களுக்கு வந்ததுபோல், ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும்: அவர்களிலொருவன் தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனத சமுதாயத்திலும் வருவான்.


‘நிச்சயமாக பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள்: எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒர கூட்டத்தாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகத்தையடைவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். அதற்கு (நபி தோழர்கள்) ‘அவர்கள் யார்” என்று கேட்க, ‘நானும் எனது தோழர்களும் எவ்வாறு நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள்’. என்று விடையளித்தார்கள். (வேறு எந்தப் பயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட்டவில்லை என்பது இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி), நூல்கள்: திர்மிதி, அஹ்மத், அபூ தாவூத்.


அபுதாவூதில் முஆவியா(ரழி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்களிடையே தான்தோன்றித்தனமான வகையில், அனாச்சாரங்கள், வெறி நாய் கடித்தவனது உடலில் அதன் விஷம் நரம்பு, தசைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று விடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘உங்களின் முன்னோர்களை நீங்கள் சானுக்குச் சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்: அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும் அவர்களை (அப்படியே) பின்பற்றுவீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் ‘யாரஸுலல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்’ என்று கேட்டோம்: அதற்கு அவர்கள் ‘வேறு யாரை’ என்றார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி), நூல் : முஸ்லிம்.


முன்னைய மதவாதிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதின் பேரால் செய்யும் காரியமான, ‘அவர்கள் அல்லாஹ்வை விட்டு, தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மரியமுடைய மகன் மஸீஹையும், தெய்வங்களாக்கிக் கொள்கிறனர்’ (அல்குர்ஆன் 9:31)


என்று அல்லாஹ் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், அல்லாஹ்வை விட்டு தம் இமாம்களையும், ஆலிம்களையும்ட தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூறு;றுக்கள். அவர்களின் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதே போல் முதல்லிதுகள், குர்ஆன், ஹதீஸுகளுக்கு நேர் முரணான காரியங்களை இமாம்கள், ஆலிம்கள் சொன்னார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவரகள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக் கூறியவற்றை அப்படியே முதல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றகின்றனர். பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முதல்லிதுகளும் பல வழி தவறிய கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக எற்று நடக்கத் தவறிவிட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக ஏற்றுக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத, கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதல்லிதுகளே: குர்ஆன், ஹதஸ்களை மட்டும் எடுத்துச் செயல்படகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதே போன்று சூஃபிஸ தத்துவமும் (தரீக்கா பிரிவுகள், கபுருச் சடங்குகள்) இது முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தில் இல்லை. குர்ஆன், ஹதீஸ்களில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை. ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன. இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள். எனவே இந்தத் தக்லீதையும், தஸவ்வஃபையும் மதவாதிகளாகக் காப்பியடித்து, எடுத்து நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றகிறவர்களாகவோ, நேர்வழி நடப்பவர்களோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூயவர்களாகவோ, ஒருபோதும் ஆக முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த தீய வழிகளிலிருந்து அல்லாஹ்(ஜல்) நம்மைக் காப்பானாக.

அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் ரப்புடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின்மீது விழமாட்டார்கள். (பார்த்துப் பரிசீலனை செய்த செயல்படுவார்கள்) அல்குர்ஆன் 25:73


இந்த வசனத்திலிருந்து குர்ஆனை தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (பார்வை பரிசீலனையில் வரமுடியாத, மறைவான விஷயங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்குர்ஆன் 3:31


இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை. இந்தியா என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது) நபி(ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும் நபி தோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை என்பதற்குச் சரியான பல ஹதீஸ் ஆதாரங்களைப் பார்;க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களையே ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மாறாக, சிந்தித்துப் பார்த்தச் செயல்படவே ஆணையிடுகிறான். இந்த நிலையில் வேறு யாரையும் ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒருபோதும் அனுமதித்து இருக்கமாட்டான். முன்சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் ‘தக்லீது’ மிக வன்மையான மறுத்தே இறக்கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இதைத் தெளிவாக விளங்கி ‘தக்லீது’ விட்டு தவ்பா செய்து முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க முடியும். தக்லீதை விட்டு தவ்பா செய்து நீங்கதாதவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும் இத்திபாவிற்கும் உள்ள வேறுபாடுகள் :

1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து, லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்த குர்ஆனை, பார்த்துப் பரிசீலனை செய்யாது. அனைத்தும் அல்லாஹ்வின் வசனங்கள் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள். அதைப் பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, அல்லாஹ்வின் வசனங்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

2. இதே போல் ஹதீஸ் நூல்களில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் இடைச் செருகல்களாக நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையுமு; உண்மை ஹதீஸ்கள் என்று பார்த்துப் பரிசீலனை செய்யாமல் நம்பிச் செயல்படகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

ஹதீஸ்களைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் பலவீனமான ஹதீஸ்களையும் நிக்கிவிட்டு உண்மையான ஹதீஸ்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

3. எந்த நூலில் எழுதப்பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றைக் குர்ஆன், ஹதீஸ்களோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை அல்லது மனிதர்களால் பேரப்பட்டவை. இறைவாக்கல்ல என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த, குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸ்களுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

4. அந்நஜாத்திலே வந்து விட்டது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்: அந்நஜாத்தில் வந்தாலும் அதில் எழுதுகிறவர்களும் மனிதர்களே, அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும்; எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின்பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப் பின்பற்றல்) உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஈ அடிச்சான் காப்பி அடிப்பது ‘தக்லீது’ ஆகும். சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான். அதனால் தான் நான் அவனைக் காப்பி அடிச்Nசுன் என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை செய்யப்பட்டிருப்பது போல், ‘தக்லீது’ அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன் திறமைமிக்க மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைப் பற்றிக் கேட்டு விளங்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால் அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமை மிக்கவர்களிடம், துர்ஆனையும், ஹதீஸ்களையும் அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளையோ, யூகங்களையோ, அல்ல) கேட்டு, குர்ஆன், ஹதீஸ்களில் உள்ளவைதான் என்று விளங்கி எடுத்து நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். இதற்கு இத்திபா என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும் இத்திபாவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீத செய்யாமல் மார்க்கத்தை எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத தக்லீதை விட்டு முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட ‘இத்திபா’ செய்யப் பழகுவோமாக!

தக்லீது : கண்மூடிப் பின்பற்றல் – புரோகிதமும், இடைத்தரகர்களும் இஸ்லாத்தில் புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முதல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா: விளங்கிப் பின்பற்றல் – புரோகிதத்தையும் இடைத் தரகர்களையும் ஒழித்துக்கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.


முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா? ‘இத்திபா’ வேண்டுமா?

அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர், நபியையும் நபி தோழர்களையும் பின்பற்றாமல், புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்பதில் பொய்யர்களாக இருந்தாலும் தங்களை முதல்லிதுகள் என்று சொல்லதில் உண்மையாளர்களா இருக்கின்றனர். ஆனால் நாங்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம். தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றுவோர்;, குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம் என்பதிலும் பொய்யர்களே, தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் மவ்லவிகள் என பொய்யாகப் பீற்றிக் கொள்ளும் புரோகிதர்களை தக்லீத் செய்யும் முதல்லிதுகளே!

எவனொருவன் நேர்வழி இன்னதொரு தனக்குத் தெளிவான பின்னரும், (அவ்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, (வேறு ஒருவரை இமாமாக ஆக்கிக் கொண்டு முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்: அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக்கெட்டதாகும்.
அல்குர்ஆன் 4:115


நன்றி : அந்நஜாத்

Tuesday, June 16, 2009

இலண்டன்:இயக்கங்களும் ஊடங்களும் தலைவர் பேராசிரியரை நோக்கி...!


  • BBC interview ( with BBC manivannan)
______________________________________________________________
  • With Director General of Islamic Foundation Dr Manazir Ahsan
____________________________________________________________________
  • Islamia dawah conference, East London.





த மு மு கத்தலைவர் பேராசிரியர்,Dr., MH. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பிரிட்டன்

சுற்றுப்பயணக்குறிப்புகள் புகைப்படங்கள் தொடரும்....

இன்ஷாஅல்லாஹ் !


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்க்கழகம்-பிரிட்டன்.

Sunday, June 07, 2009

முகவையில் பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன்

பேராசிரியர் எம்.காதர் முஹைதீன் அவர்களுடன் முகவைத்தமிழன்

இராமநாதபுரம், ஜீன் 07, 2009 : இன்று இராமநாதபுரத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகரான ஜனாப் ஷேக் தாவூது M.C அவர்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் Ex. M.P அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாஜா பேலசில் தங்கியிருந்த முஸ்லிம் லீக் தலைவர் பின்னர் இராமநாதபுரம் பாசிப்பட்டரைத் தெரு முகைதின் ஆண்டவர் ஜீம்மா மஸ்ஜிதில் நடைபெற்ற ஜனாப் ஷேக் தாவூது M.C அவர்களின் மகனும் முஸ்லிம் லீக் இளைஞரணி பிரமுகருமான ஜனாப் எஸ். குதரத்துல்லா அவர்களின் நிக்காஹ்வில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் மன்டபம் சம்மட்டியப்பா தெருவில் நடந்த ஜனாப் ஷேக் தாவூது M.C அவர்களின் இளைய மகன் ஜனாப் எஸ் கதியத்துல்லா அவர்களின் திருமணத்திலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் Ex. M.P அவர்களை முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் அவர்கள் மறியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு பேராசிரியர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

Saturday, June 06, 2009

நான் ராஜினாமா செய்யவில்லை, என்னை ஏமாற்றி விட்டனர் - தலைமை காஜி

முன்னால் அமைச்சர்கள் மதுசூதனன் மற்றும் ஓ.பி. பண்ணீர் செல்வத்துடன் தலைமை காஜி


சென்னை : "என்னை ஏமாற்றி, என்னிடம் ராஜினாமா கடிதத்தை அரசு அதிகாரிகள் பெற்றுள்ளனர். அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை காஜி, சலாஹுதின் முகமது அயூப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த மே மாதம் 31ம் தேதி எனது அலுவலகத்துக்கு, தமிழக வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம்.ஜமாலுதீன் மற்றும் தாழ்த்தப்பட்டோர் துறை துணைச் செயலர் எஸ்.எஸ்.முகமது மசூத் இருவரும் வந்தனர். அவர்கள் இருவரும், "தமிழக வக்பு வாரியத்தை முழுமையாக மாற்றியமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். வாரியத்தை மாற்றியமைக்க ஏதுவாக, உங்கள் ராஜினாமா கடிதம் வேண்டும்' எனக் கோரினர். அதிர்ச்சி அடைந்த நான் ஜமாலுதீனிடம், மற்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களைக் காண்பிக்கும்படிக் கேட்டேன். அதற்கு அவர், அந்தக் கடிதங்கள், அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். பிறகு அவர், ஏற்கனவே கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றைக் காட்டி, அதில் என்னைக் கையெழுத்து இடுமாறு கேட்டார்.

நான், "இத்தகைய பெரிய அரசுப் பணியில் இருப்பவர்கள், பொய் சொல்லமாட்டர்' என்று நினைத்து, அவர்கள் கேட்டபடி அந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து இட்டுக் கோடுத்தேன். நான் ராஜினாமா செய்த 24 மணி நேரத்திற்குள், புதிய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பின் தான் தெரிந்தது, தமிழக வக்பு வாரியத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் ராஜினாமா செய்யவில்லை என்று. எனக்குத் தவறான தகவல்களைத் தெரிவித்து, என்னை ஏமாற்றி, என்னிடம் கையெழுத்து வாங்கி உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அரசுக்கு அளித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Friday, June 05, 2009

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு முகவையில் சிறப்பான வரவேற்பு

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் அவர்கள் டெல்லியில் நடந்த பதவியேற்பு வைபவத்திற்கு பின்னர் முதல் முறையாக முகவை மாநகருக்கு இன்று வருகை தந்திருந்தார்கள். திரு. ஜே.கே ரித்தீஷ் அவர்களை திரு. முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் மற்றும் வழக்குறைஞர் திரு. அக்பர் ராஜா B.A.B.L ஆகியோர் தங்கள் நன்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சந்தித்து வாழ்த்துக்களை தெறிவித்து கொண்டனர்.

திரு. முகவைத்தமிழன், ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி உடன்

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு தி.மு.க பிரமுகர் திரு. சன்முகநாதன் அவர்கள் பொண்னாடை போர்த்துகிறார்.


இன்று இராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க ஊழியர் கூட்டத்தில் பங்கெடுத்தபின் நன்பர்கள், தோழாமை கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.தி.மு.க ஊழியர் கூட்டத்தில் அமைச்சர் சு.ப. தங்கவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுடன் வழக்குறைஞர் திரு. அக்பர் ராஜா அவர்கள்

Tuesday, June 02, 2009

துபாயில் காயிதெமில்ல‌த் பிறந்த‌ தின நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் காயிதெமில்ல‌த் பிறந்த‌ தின நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் க‌ண்ணிய‌த்திற்குரிய‌ காயிதெமில்ல‌த் அவ‌ர்க‌ளின் 114 வ‌து பிற‌ந்த நாள் நினைவாக‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் இன்ஷா அல்லாஹ் ஜுன் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழ‌மை மாலை 7.15 ம‌ணி முத‌ல் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.

இந்நிக‌ழ்வில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் ம‌துரை மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், 'இசைய‌ருவி' கும‌ரி அபுப‌க்க‌ர், இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌மிழ் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி ம‌ற்றும் க‌ல்வியாள‌ர்க‌ள் உரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

இந்நிகழ்வில் ச‌முதாய‌ப் பெருமக்க‌ள் அனைவ‌ரும் திர‌ளாக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

தொட‌ர்புக்கு கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 2533712 / முதுவை ஹிதாய‌த் 050 5196 433

மின்ன‌ஞ்ச‌ல் : muduvaihidayath@gmail.com

இணைய‌த்த‌ள‌ம் : http://www.muslimleaguetn.com / www.quaidemillathforumuae.blogspot.com

செய்திகள் : முதுவை ஹிதாயத்

எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.






கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது.

பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம் (இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம் (பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

அன்பைத் தேடி பயணப்பட்ட அவரின் வாழ்வில், அவர் இறுதியாக தேடிய மழை போன்ற அன்பு இருக்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டார். 1999 ஆம் ஆண்டு தன் 65 ஆவது வயதில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அன்றோடு மாதவிக்குட்டி என்ற தன் இயற்பெயருக்கு விடைகொடுத்து, கமலா சுரய்யா என்றப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன!

உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன.

தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

கடந்த ஒன்றரை மாதக்காலமாக சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றப்பின்னரான அவரின் கடந்த 10 ஆண்டு கால வாழ்வில் அவர் வெளிப்படுத்திய அவரின் மகத்தான எண்ணங்கள், இவ்வுலகை விட்டு நீங்காது!

அவரின் எண்ணங்களில் சில:

"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!"

"நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை."

"எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது."

"நான் முஸ்லிமாக வாழ்கிறேன்.


"பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, 'கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்' என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது. தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்."


கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை."

கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும்.

சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை புரியட்டுமாக! ஆமீன்.

நன்றி: சத்திய மார்க்கம்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template