Thursday, April 09, 2009

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நெருக்கடி - மு.லீக் விலக முடிவு

சென்னை: வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் காதர் மொய்தீனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதால், அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேறு வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்.

காதர் மொய்தீன் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே வேலூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அப்போதும் திமுக கூட்டணியில்தான் அவர் இருந்தார். அம்முறை அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் காதர் மொய்தீனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

இந் நிலையில் இதுபோன்ற சர்ச்சை ஏற்படாமல் இருக்க வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்குப் பதில், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவேன் என காதர் மொய்தீன் கூறியிருந்தார்.

ஆனால் திமுக தரப்பிலோ, ஏணி சின்னத்தில் நின்றால் சுயேச்சை வேட்பாளர் என மக்கள் கருதுவார்கள். சின்னத்தை பிரபலப்படுத்துவது சிரமம். எனவே உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதவிர தமிழகம் முழுவதும் சென்று இஸ்லாமியர்களின் வாக்குகளை திரட்ட பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அவருக்கு திமுக தரப்பு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு காதர் மொய்தீன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மண்ணடியில் நடக்கிறது. அப்போது யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார் அல்லது துபாய் பிரிவு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரிவு தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் எனத் தெரிகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template