Saturday, January 23, 2010

சவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு

துபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, "அரபு நியூஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.


"இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்' என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ""இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்'' என்றார்.

நன்றி : தினமலர்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template