Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Sunday, May 24, 2009

பத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது - பிரபாகரன் உயிரோடு உள்ளார்


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.

தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நக- : 91-44-2377 5537
பழ.நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்


இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள
அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின்றன.

பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

இப்படிக்கு
பழ. நெடுமாறன்


பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும்,பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: வைகோ அறிக்கை

தமிழீழ தேசியத்தலைவர் பற்றி பத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது எனது வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக அலுவலகமான தாயகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் அறிக்கை:

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

யுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்யைச் சொன்னது.

மே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

சில மணி நேரங்களில், வேறு ஒரு சடலத்தை சிங்கள இராணுவம் காட்டியது. இதில், வலது கண் மூடியும், இடது கண் இலேசாகத் திறந்தும் இருந்தது. முன் நெற்றியில் இருந்த காயத்தை, துணி போட்டு மறைத்து இருந்தனர். பகைவர்கள் சுட்டு இருந்தால், உடலில் எராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும். அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக் கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.

தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால், வலது காதை ஒட்டினாற்போல் கன்னப் பொருத்தில்தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று, அவரே போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். மேலும்,இரண்டாவதாகக் காட்டப்பட்ட உடலும், முகத்தோற்றமும், இது சிங்கள இராணுவத்தின் செப்பிடுவித்தை, ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.

அவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதவீனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார். எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்தது பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை?

அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம்; இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத் தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன?

இந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4′ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத்

தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றனர். தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன் இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி, மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,

தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்.
நன்றி : மீனகம்

Tuesday, May 19, 2009

தமிழீழ தேசியத் தலைவர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

"சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.
நன்றி : புதினம்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template